அறுகம்புல்
அறுகம்புல் ( Cynodon dactylon ( L. ) Pers . , Poaceae )
குறுகலான நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை . ஆனைமுகக் கடவுளுக்குப் பூசனை மூலிகையாகப் பயன்படுவது . தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது .
அறுகங்கட்டை உடல் தாதுவெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும் , சிறுநீர் பெருக்கியாகவும் , நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் , தோகை காமம் பெருக்கியாகவும் செயற்படும் .
1 . கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம் , மாதுளை இலை 30 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் காது , மூக்கு , ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும் . வெப்பம் தணியும் , மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
2 . கணுநீக்கிய அறுகம் புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும் . அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும் .
3 . அறுகம் புல் சமூலம் 30 கிராம் , கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை , மேக அனல் , உடல் வறட்சி , சிறுநீர்த் தாரையில் உள்ள புண்ணால் நீர்க்கடுப்பு , சிறு நீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும் .
4. புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும் .
5. வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச் சொறி , சிரங்கு , அடங்காத தோல் நோய் , வேர்க்குரு , தேமல் , சேற்றுப்புண் , அரிப்பு ( தினவு ) , வேனல் கட்டி தீரும் .
6 . அறுகம் வேர் 30 கிராம் . சிறுகீரை வேர் 15 கிராம் , மிளகு 5 கிராம் , சீரகம் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி , பால் , கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும் . ( மருந்து வீறு : கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ்பிடித்து , வாய் வயிறு வெந்து காணப்படுதல் )
7 . அறுகு சமூலம் 100 கிராம் , மிளகு 75 கிராம் , சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45 , 90 , 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும் .
8. 1 கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து 1 லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்கராக் கிழங்கு , பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை ( அறுகுத்தைலம் ) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம் , பித்தம் , நெஞ்சுவலி , வயிற்றெரிச்சல் , உடல் வறட்சி , மூலச்சூடு , தலைவெப்பு . நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும் .
9 . அறுகம் வேர் , நன்னாரி வேர் , ஆவாரம் வேர்ப்பட்டை , குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி.யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும் .
கருத்துகள்
கருத்துரையிடுக