அத்தி ( Ficus racemosa L .; Moraceae )
அத்தி ( Ficus racemosa L .; Moraceae )
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை . பால் வடிவச் சாறு உடையது . பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது . அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது . இலை , பிஞ்சு , காய் , பழம் , பால் , பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை .
பட்டை , பிஞ்சு , காய் ஆகியவை சதை , நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் , பழம் மலமிளக்கியாகவும் , பிஞ்சு , பழம் , பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும் .
1 . அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய் , சர்க்கரை கலந்து காலை , மாலை , கொடுத்து வர நீரிழிவு , குருதி கலந்த வயிற்றுப் போக்கு , பெரும்பாடு , சிறுநீரில் குருதி கலந்து போதல் , நரம்புப் பிடிப்பு , பித்தம் ஆகியவை தீரும் .
2 . அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும் .
3 . முருங்கை விதை , பூனைக்காலி விதை , நிலப்பனைக் கிழங்கு , பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை , மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும் .
4 . அத்திப்பட்டை , நாவல்பட்டை , கருவேலம்பட்டை , நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு , சீதப்பேதி , இரத்தப்பேதி ஆகியவை தீரும் .
5 . அத்திப்பிஞ்சு , கோவைப்பிஞ்சு , மாம்பட்டை , சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை , மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு , மூலவாயு , இரத்தமூலம் , மூலக்கிராணி ( வயிற்றுப் போக்கு ) தீரும் .
6 . அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை , மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும் . இரத்தம் பெருகும்.
7 . அத்தி , அசோகு , மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை , மாலை குடித்து வரத் தீராத பெரும்பாடு தீரும் .
கருத்துகள்
கருத்துரையிடுக